news

Thursday, September 20, 2012

சாதி குழப்பங்களும் தலித் மயக்கங்களும்

சுதந்தர இந்தியாவில் முதன்முறையாக இந்திய மக்கள் தொகையை சாதிவாரியாகக் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தங்களது எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு நலத்திட்டங்களை பெற்றுக்கொள்ள இந்தக் கணக்கெடுப்பு உதவும் என்று ஒவ்வொரு சாதியினரும் நம்புவதால் அவர்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக தமிழகத்தின் தென்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பெரும்பான்மை சமூகமான பள்ளர்களோ, தங்களை எந்தப் பிரிவில் (SC, BC, MBC, DNC) பதிவு செய்வது என்று புரியாமல் மிகவும் குழம்பிப்போய் உள்ளனர்.

ஆங்கிலேயர்கள் காலத்திலும், சுதந்தரத்துக்குப் பின்பும் இந்தியா முழுவதிலும் இருந்த சாதிகளை சமூகப் பொருளாதார அடிப்படையில் ‘முற்பட்ட சமூகத்தினர் (FC)’ என்றும் ‘பிற்படுத்தப்பட்ட (OBC) சமூகத்தினர்’ என்றும் பிரித்தனர். தீட்டுப்படும் தொழில்களைச் (மலம் அள்ளுதல், சாவு மேளம் அடித்தல், வெட்டியான் வேலை போன்றவை)செய்பவர்கள் என்று கருதப்பட்டவர்கள் ‘பட்டியல் சாதியினர் (SC)’ என்று அழைக்கப்பட்டு, அவர்களுடைய மக்கள் தொகைக்கு ஏற்பச் சில சலுகைகளையும் வழங்கினார்கள்.
இதன் அடிப்படையில் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் பட்டியல் தயாரித்தபோது, பறையர், சக்கிலியர், சாணார், பள்ளர், பள்ளி ஆகிய அனைவரையும் சேர்த்தே பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் சாணார்களும் (நாடார்) பள்ளிகளும் (வன்னியர்) தங்களுக்கு தாழ்த்தப்பட்டோர் (SC)பட்டியலில் இடம் வேண்டாம் என்று முடிவு செய்து வெளியேறிவிட்டனர். இதன்பிறகே தமிழ்நாட்டில் சாணார், பள்ளிகளை தவிர்த்த 76 சாதிகளை (பள்ளர், பறையர், சக்கிலியர், உள்ளிட்ட) பட்டியல் இனத்தில் சேர்த்தனர். அக்காலத்தில் ஒரு சமூகத்தை SC பட்டியலில் சேர்ப்பதற்கு அன்றைய ஆங்கிலேய அரசு சில வரையறைகளை வகுத்திருந்தனர். அவற்றில் முக்கியமானவை கீழே:
1. தீண்டாமையை அனுபவிப்பவர்கள்
2. கோவிலில் நுழைய அனுமதியில்லாதவர்கள்
3. பிராமணர்களுடன் தொடர்பு அற்றவர்கள்
4. மாட்டுக் கறியை உண்பவர்கள்
5. பசுவை வணங்காதவர்கள்
6. தீட்டுப்படுத்தும் தொழிலை செய்பவர்கள்
மேலே குறிப்பிட்ட சட்டதிட்டங்களுடன் ஆய்வாளர் எட்கர் தர்ஸ்டன் எழுதிய ‘தென் இந்திய குலங்களும் குடிகளும்’ என்ற புத்தகத்தில் உள்ள மேற்கோள்களையும் பரிசீலித்தே தமிழகத்தில் SC பட்டியல் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதே புத்தகத்தில் அறிஞர் எட்கர் தர்ஸ்டன் பள்ளர்களைப் பற்றி குறிப்பிடும்போது, பொதுவாக பள்ளர்களை மதுரைக்குத் தெற்கே குடும்பன் என்றும், திருச்சி கரூர் பகுதிகளில் மூப்பன் என்றும், கொங்கு பகுதியில் பண்ணாடி என்றும் பட்டக்காரர் என்றும் அழைப்பார்கள் என்று எழுதியுள்ளார். இவர்களுக்கு உதவியாக காலாடி என்றும் மண்ணாடி என்பவர்களும் இருந்து வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலேய அரசு வரையறை செய்தபடி பள்ளர்கள் தீண்டத்தகாதோர் என்று முடிவு செய்தால், எட்கர் தர்ஸ்டன் குறிப்பிட்டுள்ளபடி குடும்பன், மூப்பன், காலாடி, மண்ணாடி உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளும் தமிழ்நாட்டில் SC பட்டியலில் அல்லவா இருந்திருக்க வேண்டும்? ஏன் அவ்வாறில்லை? பட்டியலில் அவர்கள் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்.
1. குடும்பன் SC பட்டியல் (SC 35)
2. மூப்பன் BC பட்டியல் (BC 65)
3. காலாடி BC பட்டியல் (BC 35)
4. காலாடி DNC பட்டியல் (DNC 28)
5. மண்ணாடி MBC பட்டியல் (MBC 16)
இவை போக, பள்ளன், தேவேந்திர குலத்தான், கடையன், பண்ணாடி, வாதிரியான் ஆகிய பிரிவுகள் SC பட்டியலில் உள்ளன. இதற்கிடையே பள்ளர்களின் வரலாற்றுப் பெயராக கல்வெட்டுகளும், இலக்கியங்களும் குறிக்கும் மள்ளர், மல்லர் என்ற பெயர்களும், நீர்க்கட்டி, நீர்க்காணிக்கர் (உண்மையான வெள்ளாளர்கள் இவர்களே), ஓடும்பிள்ளை, அக்கசாலை போன்ற பெயர்கள் தமிழ்நாட்டில் எந்தப் பிரிவிலும் இல்லை. இத்தனைக்கும் இப்பெயர்கள் இன்றைக்கும் பள்ளர்கள் இடையே பழக்கத்தில் இருப்பவை.
குடும்பன் தீண்டத் தகாதவன். ஆனால், அவனுக்குப் படைவீரனாக இருந்த காலாடி (பாண்டிய படை மறவர்) மற்றும் குடும்பனின் உப தலைவர்களான மண்ணாடி, மூப்பன் ஆகியோர் BC பட்டியலில் இடம்பெறுகிறார்கள். இது எப்படி? மேலும், தீண்டாமையும், கோவில் நுழையாமையும் SC பட்டியலில் இடம்பெறுவதற்கான தகுதிகள் என்றால், தமிழ்நாட்டில் சாணார்களே (நாடார்கள்) அப்பட்டியலில் இருந்திருக்க வேண்டும்.
குடும்பன் என்ற சாதி தீண்டத்தகாத சாதியாக இருந்தால், இந்தியா முழுவதிலும் ஒரே பட்டியலில் (SC) அல்லவா அவர்கள் இருந்திருக்க வேண்டும்? மாறாக தமிழ்நாட்டில் SC பட்டியலிலும் மற்ற மாநிலங்களில் ஆதிக்க சாதியினராக உயர்சாதிப் பட்டியலிலும் இருப்பது விநோதமாக இல்லையா?
தீண்டாமைக்கு அளவுகோலாக வைக்கப்பட்டுள்ள தீட்டு ஏற்படுத்தக்கூடிய தொழில்களை பள்ளர்கள் செய்வதில்லை என்பதுதான் உண்மை. இன்றுவரை வேளாண்மையே இவர்களுடைய தொழில். மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம், பழனி, கோவை, பேரூர், திருச்செந்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய கோவில்களில் பள்ளர்களுக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளர்கள் சார்ந்த பல விழாக்கள் இன்றும் நடைபெறுகின்றன. இவ்விழாக்களை நடத்துபவர்கள் அக்கோவில்களில் பூசாரிகளாக உள்ள பிராமணர்களே.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆலய நுழைவுப் போராட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக உள்நுழைந்தவர்கள் சாணார்களும் (நாடார்) பறையர்களுமே ஆவர். பள்ளர்கள் அல்லர். அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் அதே மீனாட்சியம்மன் கோயிலில் தைப்பூசத்தன்று அறுவடைத் திருவிழாவிலும், மறுநாள் அனுப்பானடி தெப்பத் திருவிழாவிலும் பள்ளர்களின் தலைவனான அப்பகுதி ஊர் குடும்பனுக்கே முதல் மரியாதை செய்யப்படுகிறது. உண்மை இவ்வாறு இருக்க, பள்ளர்களில் ஒரு பிரிவினரை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்திருப்பது எந்த வகையில் நியாயமானது?
தலித் அரசியல் பேசும் அறிவுஜீவிகள் அனைவரும் பள்ளர், பறையர், சக்கிலியர் உள்ளிட்ட அனைவரையும் தலித்துகள் என்றே அடையாளப்படுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக, SC பட்டியலில் உள்ளவர்களைத் தீண்டத்தகாத தலித்துக்கள் என்றும், இதர BC, MBC பட்டியலில் உள்ளவர்களை உயர் சாதி இந்துக்கள் என்றும் இந்துத்துவ ஆதரவாளர்கள் என்றும் எழுதியும் பேசியும் வருகின்றனர். பெரியாரிய வாதிகள், தமிழ்த் தேசியவாதிகள், மார்க்சிய அறிஞர்கள் ஆகியோரும் இதனை வழிமொழிகின்றனர்.
இவர்களுடைய கருத்துப்படி பார்த்தால், SC பட்டியலில் உள்ளதாலேயே குடும்பன் தாழ்ந்தவனாகவும் தீண்டாமைக்கு உட்பட்ட தலித்தாகவும் BC பட்டியலில் உள்ளதாலேயே காலாடி, மூப்பன், மண்ணாடி ஆகியோர்களெல்லாம் சாதி இந்துக்களாகவும் வாழ்ந்து வருவது போன்ற ஒரு தோற்றம் உருவாகிறது. ஒரே குழுவைச் சேர்ந்த அல்லது ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி ஒரே சமயத்தில் தலித்தாகவும், உயர் சாதி இந்துக்களாகவும் வாழ முடியும்? பள்ளர்கள் மட்டும் எந்தப் பட்டியலில் இருந்தாலும் தலித்துகள் என்றே அழைக்கப்படுவது ஏன்? மிகவும் பரிதாப நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் நரிக்குறவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் (MBC 24) உள்ளனர். அதனாலேயே அவர்கள் ஆதிக்க சாதியினராக மாறிவிடுவார்களா?
சமீப காலமாக SC பட்டியலில் உள்ள அனைத்து சாதியினருக்கும் ஆதிதிராவிடர் என்றே சாதி சான்றிதழ் வழங்கி வருகிறது தமிழக அரசு. தற்போது நடைபெற்று வரும் சாதி வாரி கணக்கெடுப்பின்போது SC பட்டியலில் உள்ள உட்பிரிவுகளுக்குப் பதிலாக அனைவரையும் ஆதிதிராவிடர் என்றே கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாக தமிழ்நாடு முழுவதும் இருந்து தகவல்கள் வருகின்றன. BC, MBC, DNC, SC உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள பள்ளர்களை, SC பட்டியலில் உள்ள ஆதி திராவிடர் (பறையர்) பெயரில் அழைப்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி தவறானது.
சாதிவாரி பகுப்பில் இவ்வளவு குழப்பங்கள் என்றால், தலித் அரசியலில் அதைவிடப் பெரிய குழப்பங்கள்! உண்மையில், தலித், தலித் ஒற்றுமை என்பதெல்லாம் ஒருவித மாயையே. தமிழர்களை சாதிய கண்ணோட்டத்தில் தலித்துகள் என்றும் பிற்படுத்தப்பட்டோர் என்றும் பிரித்து அவர்களை ஒன்றுபட முடியாத வண்ணம் குழப்பும் அரசியலும்கூட.

No comments:

Post a Comment