news

Wednesday, March 14, 2012

அமெரிக்க தீர்மானத்தை முறியடிக்க இலங்கை பெரும் முயற்சி

கொழும்பு: ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில், தனக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை முறியடிக்கும் வகையில், எல்.எல்.ஆர்.சி.,யின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்த தனது திட்டத்தைத் தாக்கல் செய்ய, இலங்கை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


சுவிட்சர்லாந்து ஜெனீவா நகரில் நடந்து வரும், ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலின் 19வது கூட்டத் தொடரில், கடந்த 7ம் தேதி இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. இந்த தீர்மானத்திற்கு இதுவரை, 22 நாடுகள் ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளன. ஆனால், 47 நாடுகள் உறுப்பினராக உள்ள கவுன்சிலில் ஒரு தீர்மானம் ஆதரவு பெற, 26 நாடுகளின் ஆதரவு தேவை. இதில், இந்தியாவின் நிலை இன்னும் இழுபறியிலேயே உள்ளது. இதற்கிடையில், மற்ற நாடுகளின் ஆதரவைப் பெறும் பல்வேறு முயற்சிகளில், இலங்கை தீவிரமாக இறங்கியுள்ளது.


இந்நிலையில், அமெரிக்க தீர்மானம், வரும் 20 அல்லது 23ம் தேதி ஓட்டெடுப்புக்கு விடப்படலாம் எனத் தெரிகிறது. இத்தீர்மானத்தை முறியடிக்க அல்லது ஓட்டெடுப்பு நடக்க விடாமல் தடுக்க அல்லது தீர்மானத்தின் சில பகுதிகளை திருத்தங்கள் மூலம் நீர்த்துப் போகச் செய்ய, இலங்கை முக்கிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஜெனீவா நகரில் திரண்டுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழுவினர், இலங்கை நியமித்த, கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் (எல்.எல்.ஆர்.சி.,) பரிந்துரைகள் எவ்விதத்தில் அமல்படுத்தப்பட உள்ளன என்பதை விளக்கும் வகையில் ஒரு திட்டத்தை, கவுன்சிலில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். அத்திட்டத்தை தயாரிக்கும் முயற்சியில் முழு மூச்சாக இறங்கியுள்ளனர் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதேநேரம், இலங்கையின் இந்த இழுத்தடிப்புகளுக்கு அமெரிக்கா கடும் கண்டனமும், எச்சரிக்கையும் தெரிவித்துள்ளது. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நேற்று பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சக சார்புச் செயலர் ராபர்ட் ஓ பிளேக்,"நடந்த போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பேற்றல், நல்லிணக்கம் ஆகியவை இலங்கையின் நலனுக்கு முக்கியம். இதைச் செய்யத் தவறிய நாடுகள் மீண்டும் வன்முறைகளில் சிக்கியுள்ளன. இலங்கையும் அந்த தவறைச் செய்தால், அந்த நிலை இலங்கையில் மீண்டும் ஏற்படலாம்' என்றார். இந்நிலையில், சேனல் 4 செய்தி நிறுவனம் புதிய வீடியோ தொகுப்பு வெளியிடுவது குறித்து பேட்டியளித்த, அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலண்ட்,"இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா பலமுறை கவலை தெரிவித்துள்ளது. போர் குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்புக் கூறுவதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கிறது. இலங்கை தான் கூறிய உறுதிமொழிகளை அமல்படுத்த தவறியதால் தான், இந்த தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்துள்ளது' என்றார். கவுன்சிலில் நேற்று முன்தினம் நடந்த விவாதத்தின் போது, நார்வே வெளியிட்ட அறிக்கையில்,"மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்களுக்கு இலங்கை பதில் அளிக்க வேண்டும். எல்.எல்.ஆர்.சி., பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்' எனக் கூறியுள்ளது.

No comments:

Post a Comment